பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் அதிகாரியின் தந்தை பலி


பள்ளிப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் அதிகாரியின் தந்தை பலி
x

பள்ளிப்பட்டு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் அதிகாரியின் தந்தை பரிதாபமாக பலியானார்.

திருவள்ளூர்

மோட்டார் சைக்கிள் மோதல்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குமாரராஜூப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவர் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரி பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை மாணிக்கம் (வயது 60). இந்த நிலையில், குமாரராஜூப்பேட்டையில் வசித்து வரும் முதியவர் பாபு, நேற்று முன்தினம் இரவு அங்குள்ள டீக்கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது, பள்ளிப்பட்டு நோக்கி அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

இதில்படுகாயம் அடைந்த மாணிக்கத்தை அருகில் உள்ளவர்கள் உடனே மீட்டு, பள்ளிப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

பள்ளிப்பட்டு தாலுகா சிங்க சமுத்திரம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் பாலையா (55). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கிராமத்திற்கு செல்வதற்காக கோரகுப்பம் பஸ் நிலையம் அருகே ஆட்டோவுக்காக காத்திருந்தபோது, அத்திமாஞ்சேரி பேட்டையில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலையாவை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக செத்தார்.

இந்த விபத்து குறித்து பொதட்டூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலையா மீது மோட்டார் சைக்கிளை மோதி விட்டுச் சென்ற ஆர்.கே.பேட்டை அருகே செதுலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (53) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story