வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்


வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 19 Jun 2023 1:46 AM IST (Updated: 19 Jun 2023 1:08 PM IST)
t-max-icont-min-icon

வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக தஞ்சை போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

வேகமாக வந்த காரை துரத்திச்சென்று மடக்கிய போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக தஞ்சை போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் காட்டுராஜா. சம்பவத்தன்று இவர் மற்ற போலீஸ்காரர்களுடன் தஞ்சை மேலவெளி ஊராட்சியில் உள்ள சிங்கப்பெருமாள்குளம் கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஒட்டிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் காட்டுராஜா மற்றும் போலீசார் வாகனத்தில் ஏறி அந்த காரை துரத்திச்சென்றனர்.

2 பேர் மீது வழக்குப்பதிவு

1 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த 2 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் காட்டுராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி உள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் சென்று விட்டனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் காட்டுராஜா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் தஞ்சை ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த காரல்மார்க்ஸ் (வயது 44), தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் (44) என்பது தெரிய வந்தது. 2 பேரும் பைனான்ஸ் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story