'சிங்கம்' சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீஸ்காரர்


சிங்கம் சூர்யா பாணியில் மீசை வைத்திருந்த போலீஸ்காரர்
x

ஊட்டி கோர்ட்டுக்கு வழக்கு விசாரணைக்காக வந்த போலீஸ்காரர் ‘சிங்கம்’ சூர்யா பாணியில் மீசை வைத்திருந்தார். அவரை நீதிபதி கண்டித்ததால் உடனடியாக சரிசெய்தார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி கோர்ட்டுக்கு வழக்கு விசாரணைக்காக வந்த போலீஸ்காரர் 'சிங்கம்' சூர்யா பாணியில் மீசை வைத்திருந்தார். அவரை நீதிபதி கண்டித்ததால் உடனடியாக சரிசெய்தார்.

பெரிய மீசை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அம்பலமூலா போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் கண்ணன் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று ஒரு வழக்கு சம்பந்தமாக ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது ராஜேஷ் கண்ணன் சிங்கம் திரைப்படத்தில் வரும் நடிகர் சூர்யா போல் பெரிய மீசை வைத்திருந்தார்.

இதை பார்த்து அதிருப்தி அடைந்த நீதிபதி முருகன், மீசை வைக்க உயர் அதிகாரிகளிடம் முறையாக தகவல் தரப்பட்டு உள்ளதா என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் மீசையை சரி செய்யுமாறும் கண்டிப்புடன் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் ராஜேஷ் கண்ணன் செய்வதறியாமல் திகைத்தார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக வெளியே சென்று அருகில் உள்ள அழகு நிலையத்தில் தனது மீசையை வெட்டி சரிசெய்த பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தார்.

கோர்ட்டில் சலசலப்பு

இந்த சம்பவம் காரணமாக கோர்ட்டு வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் வட்டாரத்தில் நேற்று விவாத பொருளாக மாறியது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பொதுவாக காவல் துறையில் பணிபுரிபவர்களின் அடையாள அட்டையில் உள்ளவாறு தான் தோற்றம் இருக்க வேண்டும். அதை தாண்டி, போலீசார் மொட்டை எடுப்பதாக இருந்தாலோ, பெரிய அளவில் மீசை வைப்பதாக இருந்தாலோ அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து அந்த போலீஸ்காரருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story