ரகளையில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்

பொள்ளாச்சி அருகே அரசியல் கட்சி பிரமுகர் ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே அரசியல் கட்சி பிரமுகர் ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மளிகை கடை சேதம்
பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்ற 2 பேர் திடீரென உணவு பொருட்கள் வைத்திருந்த பாட்டில்களை எடுத்து சாலையில் வீசினார்கள். மேலும் ஒவ்வொரு பொருட்களாக எடுத்து வெளியே வீசி கடையை சேதப்படுத்தினர். இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லிங்கதுரை மற்றும் அவரது தம்பி மகாராஜா என்பதும், அந்த கடை அவர்களுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. மேலும் லிங்கதுரை, ஒரு அரசியல் கட்சியில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளதும் தெரியவந்தது.
வீடியோ வைரல்
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அவர்கள் கடையை சேதப்படுத்துவது, போலீசார் கண் முன்னே ரகளையில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






