'ஹேர்டை'க்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
‘ஹேர்டை’க்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சிவகங்கையை அடுத்த அழகு நாச்சியபுரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி சென்னை தியாகராஜர் நகரில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் 'ஹேர்டை' வாங்கினார். அதன் விலை ரூ.29 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால் அந்த கடையில் அதைவிட கூடுதலாக ரூ.10 சேர்த்து ரூ.39 வாங்கினர்.
இதுகுறித்து துரைப்பாண்டி அந்த கடை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான துரைப்பாண்டி சிவகங்கையில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமன் ராஜ் ஆகியோர் விசாரணை செய்தனர்.
இதில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமானது சேவை குறைபாட்டுக்காக துரைப்பாண்டிக்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம், துரைப்பாண்டியிடம் கூடுதலாக வசூலித்த ரூ.10 ஆகியவற்றை சேர்த்து ரூ.30 ஆயிரத்து 10-ஐ வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.