வாட்ஸ்-அப் தகவலை நம்பி ரூ.7¼ லட்சத்தை பறி கொடுத்த பேராசிரியர்


வாட்ஸ்-அப் தகவலை நம்பி ரூ.7¼ லட்சத்தை பறி கொடுத்த பேராசிரியர்
x
தினத்தந்தி 22 Oct 2023 7:30 PM GMT (Updated: 22 Oct 2023 7:31 PM GMT)
கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

கோவையில் கேரள அழகிகளை வைத்து மசாஜ் செய்வதாக வந்த வாட்ஸ்-அப் தகவலை நம்பி, தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் ரூ.7¼ லட்சத்தை பறிகொடுத்தார்.

இதுகுறித்து விவரம் வருமாறு:-

துணை பேராசிரியர்

கோவை பீளமேடு புதூர் மறைமலை அடிகளார் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 43), தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் உடல் வலி காரணமாக பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி இவரது வாட்ஸ்-அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் கேரள அழகிகள் மூலம் மசாஜ் செய்யப்படுகிறது. இதில் உடல்வலிகள் அனைத்தும் நீங்கிவிடும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் பதிவு செய்ய லிங் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

மசாஜ்

இதனை பார்த்த ராதாகிருஷ்ணன் அந்த லிங்கில், உள்ளே சென்று அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், எங்களுக்கு கோவையில் பல இடங்களில் மசாஜ் சென்டர் உள்ளது என்றும், நீங்கள் கோவை-அவினாசி சாலையில் ஹோப் காலேஜ் அருகே உள்ள மசாஜ் சென்டரில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் முன்பதிவு கட்டணத்தை வங்கி மூலம் செலுத்த வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

ரூ.7¼ லட்சம் மோசடி

இதனை நம்பிய அவர், அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு மசாஜ் கட்டணம், அறை வாடகை, கேரளத்தில் இருந்து வரும் பெண்களுக்கு சிறப்பு கட்டணம் என பல்வேறு தவணையாக ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 250-ஐ அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்த நபர்களை தொடர்பு கொண்டு எப்போது மசாஜ் செய்ய வரவேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இன்னும் பணம் அனுப்புமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் ஹோப் காலேஜ் பகுதிக்கு சென்று அவர்கள் குறிப்பிட்ட முகவரியில் தேடி பார்த்தார். அப்போது அங்கு மசாஜ் சென்டர் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் பேசியவரின் செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணை பேராசிரியரிடம் பணம் பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story