மாணவிகள் தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி


மாணவிகள் தூய்மை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி
x

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கலெக்டர் உமா தலைமையில் மாணவிகள் பள்ளி தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

நாமக்கல்

தூய்மை திட்டம்

தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள 37,574 அரசு பள்ளிகளில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாக கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் தூய்மையான வகுப்பறை மற்றும் வளாகம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுத்தமான கழிவறைகள் தொடர்பாக அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு, அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து பள்ளிகளில், "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற விரிவான மற்றும் நிலையான தூய்மை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனிப்பட்ட சுகாதாரம், பள்ளிகளில் பசுமையை அதிகரித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கழிவு மேலாண்மை நடைமுறைகள், பள்ளி காய்கறி தோட்டம், மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் இல்லாத வளாகம் மற்றும் மாற்று வழிகளை நோக்கி மாணவர்களை அழைத்து செல்ல இத்திட்டம் ஊக்குவிக்கும்.

உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் "பள்ளி தூய்மை உறுதிமொழி" எடுத்து கொண்டனர். மேலும் ஆசிரியர் தினத்தையொட்டி கலெக்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, ஆசிரியர்கள், மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து கலெக்டர் தலைமையில் என் பள்ளியை தூய்மையாகவும். சுத்தமாகவும் வைத்திருப்பது கடமையும் பொறுப்பும் என்பதனை உணர்ந்து செயல்படுவேன். எனது பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பையை ஏற்படுத்தமாட்டேன். மேலும் எனது சக தோழர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். எனது பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்ப்பணித்துக் கொள்வேன் என அனைத்து மாணவிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story