பிணம்போல் வேடமிட்டு நூதன போராட்டம்
பிணம்போல் வேடமிட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள வேளானூர் கிராமத்தில் மயான வசதி இல்லாததால் தெருவில் வைத்து சடலங்களை எரிக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. மயான வசதிகேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே இருந்த மயானம் தனியார் நிலத்தில் உள்ளதால் அந்த நிலத்தினை கையகப்படுத்தி மயானமாக வழங்குவதாக அறிவித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், மயான வசதி செய்துதரக்கோரியும் வேளானூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், தமிழ்புலிகள் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் கழுத்தில் மாலை அணிந்து பிணம்போல வேடமிட்டு தரையில் படுத்து தங்களை எரிக்க, புதைக்க மயானம் வேண்டும் என்று கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் அவர்களை கலைந்து சென்று மனு அளிக்குமாறு கூறினர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரகோரி தொடர்ந்து தரையில் படுத்து கோஷமிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.