வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்
எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டமேடு பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல ேமல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி அருகே உள்ள முட்புதர்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறதாம். இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தும் குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல இந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள நிலத்தில் வளர்ந்துள்ள முட்செடிகளை அப்புறப்படுத்தி அந்த அரசு நிலத்தை பள்ளிக்கு ஒப்படைக்க வலியுறுத்தி பெற்றோர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 7-ந்தேதி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட உள்ளவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நோட்டீஸ் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.