நகைகள் இருந்த மணிபர்ஸ் திருட்டு


நகைகள் இருந்த மணிபர்ஸ் திருட்டு
x

நகைகள் இருந்த மணிபர்ஸ் திருட்டு போனது.

பெரம்பலூர்

நகைகள் இருந்த மணிபர்ஸ்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மேலத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி மாரியாயி (வயது 41). இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூரில் நடைபெறவுள்ள தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக தாலி சங்கிலிக்கு அரை பவுன் காசு வாங்குவதற்காக பெரம்பலூர் கடைவீதியில் தேரடி அருகே உள்ள நகைக்கடைக்கு நேற்று மதியம் மகனுடன் வந்தார்.

அப்போது மாரியாயி திருமணத்தின் போது அணிந்து கொள்வதற்காக தனது 6 பவுன் தாலிக்கொடி, 4 பவுன் கருகமணி, 2 பவுன் கழுத்து சங்கிலி, அரை பவுன் மோதிரம் என மொத்தம் 12½ பவுன் நகைகளை ஏற்கனவே மணிபர்சில் வைத்து, அதனை தனது மடியில் வைத்திருந்தார். இந்நிலையில் அவர் அரை பவுன் தாலி காசை வாங்குவதற்காக கடைக்காரரிடம் பணம் கொடுக்க எழுந்தபோது நகைகள் இருந்த மணி பர்ஸ் மடியில் இருந்து கீழே விழுந்தது. பின்னர் மாரியாயி அந்த மணிபர்சை தேடியபோது, அதனை காணவில்லை. இதனால் மாரியாயி அதிர்ச்சியடைந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து ஊழியர்கள் நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மாரியாயி மடியில் இருந்து மணிபர்ஸ் கீழே விழுந்ததை கவனிக்காதபோது, அருகே அமர்ந்திருந்த ஆண் ஒருவர் அந்த மணிபர்சை எடுத்து வெளியே சென்றது பதிவாகியிருந்தது.

மாரியாயி இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நகைக்கடை கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நபரின் உருவத்தை விசாரித்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story