குழந்தை, பெண்கள் உள்பட 13 பேரை கடித்துக்குதறிய வெறிநாய்


குழந்தை, பெண்கள் உள்பட 13 பேரை கடித்துக்குதறிய வெறிநாய்
x

திருச்சுழி பகுதியில் 3 கிராமங்களில் புகுந்து குழந்தை, பெண்கள் உள்பட 13 பேரை வெறிநாய் கடித்துக்குதறியது.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி பகுதியில் 3 கிராமங்களில் புகுந்து குழந்தை, பெண்கள் உள்பட 13 பேரை வெறிநாய் கடித்துக்குதறியது.

விரட்டி கடித்த நாய்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சென்னிலைக்குடி குரூப் கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் வெறிநாய் ஒன்று சுற்றித்திரிந்தது. நேற்று அந்த நாய் தெருக்களில் நடந்து சென்றவர்களை விரட்டி, விரட்டி கடித்தது.

தெருவில் விளையாடிய ஹேமலதா என்ற குழந்தையையும் கடித்தது. மேலும் பாக்கியம் (வயது 40), பூமிலட்சுமி (32), வைரலட்சுமி (34), மாரீசுவரி (30), நாகஜோதி (33), பாப்பாத்தியம்மாள் (60) உள்பட 7 பேரும் நாய் கடித்ததில் படுகாயம் அடைந்தனர். இதில் நாயை பார்த்து பாக்கியம் பயந்து ஓடியபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்ேபாது நாய் கடித்ததில், அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

காயம் அடைந்த குழந்தை உள்பட 8 பேரையும் உடனே மீட்டு சிகிச்சைக்காக திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 பேர் படுகாயம்

அதே நேரத்தில் அந்த நாய் அங்கிருந்து உடையனாம்பட்டி, சென்னிக்குடி ஆகிய கிராமங்களிலும் புகுந்து அங்கிருந்தவர்களையும் கடித்தது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களும் திருச்சுழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நாய் அங்குள்ள தெருக்களில் சுற்றி வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அந்த நாயை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story