குழந்தை உள்பட 9 பேரை கடித்து குதறிய வெறிநாய்
கீழக்கரை பகுதியில் ஒரே நாளில் 4 வயது குழந்தை உள்பட 9 பேரை வெறி நாய் கடித்து குதறியது.
கீழக்கரை,
கீழக்கரை பகுதியில் ஒரே நாளில் 4 வயது குழந்தை உள்பட 9 பேரை வெறி நாய் கடித்து குதறியது.
9 பேர் காயம்
கீழக்கரையில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சில நாய்கள் வெறி பிடித்து சுற்றுகிறது. அவை தெருக்களில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது.
நேற்று முன் தினம் இரவு கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த ஹாலிது ரஹ்மான் மகன் ஆசிப் (11), மேலத்தெரு அஜ்மீர் கான் மகன் முஹம்மது வதூது (4), சின்ன மாயா குளம் பகுதி குமார் (37), வேலு (41). முஹம்மது ஜலாலுதீன் மகள் நூருல் அரப், கும்பிடு மதுரை பகுதி செல்லையன் (60), முஸ்தபா மகன் மிஸ் பகரூஸ் ரகுமான் (15), ஆண்டி மனைவி முத்துராக்கு (62), வட மாநில தொழிலாளர் ஹபிபுர் (19) ஆகிய 9 பேரை ஒரே நாளில் வெறி நாய் கடித்துள்ளது.
நடவடிக்கை
இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கீழக்கரை நகராட்சியில் சுற்றி திரியும் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், எஸ்.டி.பி.ஐ, விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பாக நகராட்சி கமிஷனர் மற்றும் நகர் மன்ற தலைவரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதாவிடம் கேட்டபோது, நகரில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.