பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி


பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி
x

தா.பழூர் அருகே பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரியஒளி படும் அபூர்வ காட்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சவுந்தரநாயகி அம்பாள் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண காலத்தில் ஒரு முறையும், தட்சிணாயன காலத்தில் ஒரு முறையும் தொடர்ந்து 5 நாட்கள் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழும். உத்தராயண காலத்தில் சித்திரை மாதத்தில் 5-ந் தேதிக்கு மேல் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். தமிழ் மாதத்தில் சித்திரை மாதம் தொடக்கம் என்பதால் சூரிய பகவான் தனது பயணத்தை தொடங்கும் போது தனது சூரிய கதிர்களை லிங்கத்தின் மீது பாய்ச்சி வழிபட்டு செல்வதாக ஐதீகம்.

அதன்படி நேற்று காலை 6.07 மணிக்கு சூரிய உதயத்தின்போது அதிலிருந்து தோன்றிய சூரிய கதிர் லிங்கத்தின் மீது பட்டு லிங்க திருமேனி தக தகவென மின்னியது. தங்கத்தை வார்த்து ஊற்றியது போல் இருந்த லிங்க திருமேனியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் சரண கோஷங்களை எழுப்பினர். சுமார் 6 நிமிடங்கள் நீடித்த இந்த அபூர்வ நிகழ்வினைக்காண்பதற்கு காரைக்குறிச்சி மற்றும் தா.பழூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். சூரியன் ஈசனை வழிபடும் நேரத்தில் இறைவனை வழிபடும் போது சகலவிதமான தோஷங்கள் நீங்குகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிகழ்வு இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கோவில் வழிபாட்டு குழுவினர் தெரிவித்தனர்.


Next Story