ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: நீலகிரியில் கடைகள் அடைப்பு


ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: நீலகிரியில் கடைகள் அடைப்பு
x

ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 80 சதவீத கடைகள் மூடப்பட்டு இருந்தன.

ஊட்டி,

முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கடந்த 6-ந் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில் ஆ.ராசா எம்.பி. பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தன.

போலீஸ் கண்காணிப்பு

பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று நீலகிரி தொகுதியில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்பட பல இடங்களில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்ததன.

மார்க்கெட் மூடல்

ஊட்டியில் கமர்சியல் வீதி, மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்களும் பல்வேறு இடங்களில் இயங்கவில்லை‌‌. இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

தயிர் மற்றும் பால் விற்பனை, மருந்து கடைகள், பேக்கரி, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமான கடைகள் திறந்திருந்தன.

கடைகளை மூட வலியுறுத்தியதாக கூறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பந்தலூரில் கடையை திறந்ததாக அதன் மீது கல்வீசப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பஸ் நிலையம், அங்குள்ள வணிக வளாகம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

25 பேர் கைது

அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வணிக வளாகங்கள், வீதிகளில் கடைகள், உணவகங்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் ஜெயபால் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை அறிந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மற்றும் நிர்வாகிகள் மண்டபத்துக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர். இதனால் அன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தின்போது பேக்கரி மீது கல்வீசி தாக்குதல் நடந்தது.

இதுதொடர்பாக இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 23 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story