ஓணம் பண்டிகை: தோவாளை பூ மார்கெட்டில் 500 டன் பூக்கள் விற்பனையாகி சாதனை
தோவாளை பூமார்கெட்டில் விடியவிடிய நடந்த வியாபாரத்தில் 500 டன் பூக்கள் விற்பனையானதில் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற பூ மார்கெட் உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் பூக்கள் மார்கெட்டுக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களிலிருந்தும் டன் கணக்கில் பூக்கள் வருகிறது. மார்கெட்டிலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு அதிக அளவு பூக்கள் விற்பனையாகிறது.
தற்போது ஓணப்பண்டிகை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே தோவாளை பூமார்கெட் களைகட்ட தொடங்கியது. ஓணப்பண்டிகை என்றாலே அத்தப்பூ கோலம்தான் நினைவுக்கு வரும். ஓணம் தொடங்கியதிலிருந்தே எல்லா வீடுகள் முன்பும் அத்தப்பூ கோலம் இடுவார்கள்.
இக்கோலத்திற்கு கலர் பூக்களையே பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். வாடாமல்லி, சிவப்பு, மஞ்சள் கிரேந்தி, மஞ்சள், வெள்ளை செவ்வந்தி, வெள்ளை, சிவப்பு, ரோஸ் அரளிகள், ஆஸ்டல் பூ, ரோஸ் வகைகளான மஞ்சள், ஆரஞ்சு, பட்டன். பன்னீர் ஆகியவைதான் இவை.
ஒணப் பண்டிகையையொட்டி விற்பனைக்காக 1 மாதத்திற்கு முன்பே பூக்களை வெளிமாவட்டத்தில் உள்ள ஊர்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளனர். ஓணம் பண்டிகை தொடங்கிய நாளிலிருந்து தற்போது தினமும் சுமார் 50 டன் பூக்கள் விற்பனையாகி வருகின்றன. பொன் ஓணம் என்று சொல்லகூடிய ஓணப்பண்டிகை நாளை (8-ம் தேதி) நடக்கிறது.
அதற்காக தோவாளை பூமார்கெட்டில் விடியவிடிய சிறப்பு விற்பனை நடந்தது. இதற்காக ராயகோட்டை, சேலம் பொம்முடி, ஓசூர், திண்டுக்கல், திருச்சி, ஆகிய இடங்களில் இருந்து சுமார் 50 லாரகளில் பூக்கள் வந்து குவிந்திருந்தன. அனைத்தும் விற்றுதீர்ந்தன.
இதில் கேரளாவிலிருந்து சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வந்திருந்து ஆர்வத்துடன் வந்து பூக்களை வாங்கி சென்றனர். தொடர்ந்து இன்று காலையிலும் வியாபாரம் நடைபெற்றது. நேற்று இரவு முதல் இன்று மதியம் 12 மணி வரையிலும் 500 டன் பூக்கள் விற்பனையானது. சுமார் 4 வருடத்திற்கு பிறகு நல்ல வியாபாரம் என்று பூ வியாபாரி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
மேலும் வியாரிகளான நாங்கள் மட்டுமல்ல பூக்களின் விலை அதிகமாக இருந்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
விற்பனையான பூக்களின் விலை வருமாறு:
பூக்கள் | விலை |
பிச்சி | ரூ.1650 |
மல்லி | ரூ.3300 |
முல்லை | ரூ.1500 |
அரளி | ரூ.270 |
சம்பங்கி | ரூ.200 |
வாடாமல்லி | ரூ.300 |
கனகாம்பரம் | ரூ.1000 |
பட்டன் ரோஸ் | ரூ.180 |
ஸ்டம் ரோஸ் | ரூ. 280 |