முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர் வலைகளை உலர்த்த நிழற்கூடம் அமைக்க கோரிக்கை


முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர் வலைகளை உலர்த்த நிழற்கூடம் அமைக்க சங்குகுளி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர் வலைகளை உலர்த்தவும், சரி செய்யவும் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என சங்குகளி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

தர்ணா

தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஆறுமுகம், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சங்கரன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் முத்து மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சுமார் 30 பேர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கயத்தாறு தாலுகா கரடிகுளத்தில் 68 ஏக்கர் நிலத்தில் 14 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிலத்தை ஒருவர் கோர்ட்டு உத்தரவு என்று கூறி, தனது பெயருக்கு பதிவு செய்து உள்ளார். விவசாயிகளின் பெயரில் உள்ள கிராம வருவாய் ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்வதற்கு முயற்சி நடந்து வருகிறது. ஆகையால் அந்த நிலத்தில் உரிமையாளர்களான 14 விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், அந்த நிலத்தை வேறு யாருக்கும் பட்டா மாற்றம் செய்வதை தடுக்க வேண்டும். அந்த விவசாயிகளின் உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சங்குகுளி தொழிலாளர்கள்

தூத்துக்குடி சிதம்பரனார் மாவட்ட மீனவர் மற்றும் சங்குகுளி தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கோவளம் மீனவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். சுனாமியின் போது, எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. நாங்கள் கடலுக்கு சென்று விட்டு கரைக்கு வரும் போது, கரையோரத்தில் இருந்த சிறிய முட்செடிகளின் நிழலில் அமர்ந்து வலைகளை உலர்த்தி வந்தோம். தற்போது பூங்கா அமைப்பதற்காக முட்செடிகளை அகற்றி வருகின்றனர். இதனால் மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், வலைகளை சரி செய்வதற்கும் பொதுவான நிழற்கூடம் அமைத்து தர வேண்டும். கடல் அரிப்பு ஏற்படாதவாறு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சாலை வசதி

தூத்துக்குடி புறநகர் 52-வது வார்டு கிளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வன்னியராஜா கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 52-வது வார்டு மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் உள்ள சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆகையால் சாலையை சீரமைத்து, மழைநீர், கழிவுநீர் தெருக்களில் தோங்காத வகையில் வாறுகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்து முன்னணி

தூத்துக்குடி மாநகரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதற்கு அனுமதி அளிக்க மறுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ உறுப்பினர்களின் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். மாநில இந்து முன்னணி துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்து ஆட்டோ முன்னணி மாநில துணை பொது செயலாளர் சக்திவேல், இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார், இந்து ஆட்டோ முன்னணி மாரியப்பன், மாவட்ட செயலாளர் சுப்புராயலு, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க அனுமதி கோரி மனு கொடுத்தனர்.

ஆஷ் நினைவு மண்டபம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில செயலாளர் வசந்தகுமார், இளைஞர் அணி செல்வசுந்தர் மற்றும் கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்து உள்ள ஆஷ் நினைவகத்தை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் புனரமைப்பு செய்வதை நிறுத்த வேண்டும். அந்த நினைவகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் வ.உ.சி.யின் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கப்பல் கம்பெனியின் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராகவேந்திரா கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பீச் ரோடு பகுதியில் ஆஷ்துரையின் நினைவு மண்டபம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட்ட ஆஷ்துரை மண்டபத்தை புதுப்பிக்கும் பணியை நிறுத்தி விட்டு, பொதுமக்களுக்கு, பள்ளி குழந்தைகளுக்கு சுதந்திர வரலாறு பற்றிய புத்தகங்களை வைப்பதற்கு நூலகம் அமைக்கலாம். வீடற்ற ஏழை, எளியவர்கள் தங்கும் இடமாக மாற்ற வேண்டும் என்று கூறி உள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் கட்சி செயலாளர் சுரேஷ்வேலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சாதிய தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய ஆஸ்துரை நினைவு மண்டபத்தை, அவரது முழுஉருவ வெண்கலச்சிலையுடன் கூடிய மணிமண்டபமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். அவரது வாழ்க்கை வரலாற்றை பாடமாக மணிமண்டபத்தில் பொறிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் மாரிசெல்வம், மாவட்ட துணை செயலாளர் அர்ச்சுணன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனுகொடுத்தனர். அந்த மனுவில் தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு மது குடிப்பவர்கள் ரோட்டில் மதுபாட்டிலை வீசி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் 2 டாஸ்மாக் மதுக்கடைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தனித்தனியாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மாசுவின் காரணமாக தூத்துக்குடியில் பாதிப்பு ஏற்பட்டது என்று தவறான தகவல்களை பரப்பியதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த ஆலையால் எந்தவித பாதிப்பு இல்லை என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். கடந்த 4 ஆண்டுகளாக ஆலை மூடப்பட்டுள்ள போதும், கடலில் அதே அளவு தான் மீன்வளம் கிடைக்கிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நன்றாக உணர்ந்து உள்ளோம். ஆகையால் தூத்துக்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மின்கட்டணம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கதிர்வேல் மற்றும் கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு மக்களை மிகவும் பாதிக்கக்கூடியது. ஆகையால் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story