திருவண்ணாமலையில் கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலையில் கோடை விழா முன்னோற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் கோடை விழா முன்னோற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கோடை விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
வருவாய்த்துறையின் மூலம் கோடை விழா நடத்துவதற்கான இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். விழா மேடை, ஒலி, ஒளி, இருக்கை வசதிகள், நிகழ்ச்சி நிரல் விளம்பரப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல், வனத்துறையின் மூலமாக விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தல், பழங்குடியினர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் பல்வேறு துறைகளில் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களின் விவரங்கள், அரசு சார்பில் வழங்கப்படும் திட்ட உதவிகள் மற்றும் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்களின் விவரங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் அரங்குகள் அமைக்க வேண்டும்.
மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தல், சுற்றுலாத் துறையின் மூலமாக கோலப்பன் ஏரியை தூய்மையான முறையில் பராமரித்தல், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் படகு சவாரி மேற்கொள்வதற்கு ஏதுவாக தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக சாலைகளை சரி செய்தல், கோடை விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுதல் வேண்டும். அதேபோல ஜவ்வாது மலையில் 254 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு சார்பில் வழங்க அனைத்து துறை அலுவலர்கள் விவரங்களை தயார் செய்தல் வேண்டும். அது மட்டுமின்றி திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். எனவே போக்குவரத்து சிரமமின்றி பஸ் வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சையது சுலைமான், ஊரக வளர்ச்சி துறை செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.