அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்த யானை


அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்த யானை
x

ஆம்பூர் வனப்பகுதியில் யானை ஒன்று அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர்

இறந்து கிடந்த யானை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகம் தமிழக- ஆந்திர எல்லையோரம் உள்ளது. ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக் காட்டில் யானை ஒன்று இறந்து அழுகிய நிலையில் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து உதவி வனப்பாதுகாவலர் வினோத் தலைமையில், ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு உள்ளிட்ட வனத்துறையினர் 15-க்கும் மேற்பட்டவர்கள் விரைந்து சென்றனர்.

ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட துருகம் காப்புக் காட்டில் யானை இறந்த பகுதிக்கு சென்றனர். அங்கு ஆந்திர மாநில எல்லையோரம் துருகம் காப்புக்காடு, பொட்டல் ஊட்டல் கொல்லை வனப்பகுதியில் யானை இறந்து, எலும்புக்கூடாக கிடந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் விசாரணை

அழுகிய நிலையில் இருந்ததால் கால்நடை மருத்துவர்கள் ராஜ்குமார், இளவரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

வயது முதிர்வு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றும், இறந்தது பெண் யானையாக இருக்கலாம் எனவும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story