பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு


பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், நகரில் பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை

பில்லூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், நகரில் பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று குடிநீர் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினை

கோவை நகருக்கு பில்லூர், சிறுவாணி, ஆழியார் ஆகியவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் தினமும் நகருக்கு 4 கோடியே 80 லட்சம் லிட்டர் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் நகரில் பெரும்பாலான பகுதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சில பகுதிகளில் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

குழாயில் உடைப்பு

இந்த நிலையில் நேற்று பில்லூர் குடிநீர் 2-வது திட்டத்தில் நகருக்கு வினியோகம் செய்யப்படும் பிரதான குழாயில் வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலையம் அருகே முத்துக்கல்லூர் என்ற இடத்தில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடி அங்குள்ள தோட்டங்களுக்குள் பாய்ந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குடிநீர் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் விரைந்து சென்று தண்ணீரை நிறுத்தினர். இதனால் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் வருவதற்கு முன்னதாகவே அதிக அளவு குடிநீர் வீணானது.

இன்றும் வினியோகம் தடை

இதன் காரணமாக நேற்று பில்லூர் 2-வது குடிநீர் திட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டது.

இது குறித்து கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பில்லூர் 2-வது திட்டம் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால், அந்த திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம் ரத்தினபுரி, சித்தாபுதூர், உக்கடம் பகுதிகளில் குடிநீர் வினியோகம் நேற்று பாதிக்கப்பட்டது.

அந்த பகுதிகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை) குடிநீர் வினியோகம் தடைபடும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு, கோவை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே குடிநீர் வினியோகம் தாமதப்பட்டு வரும் நிலையில், பில்லூர் குடிநீர் குழாய் உடைப்பு, குடிநீர் வினியோகத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story