மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்


மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்
x

மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவனை ஹெலிகாப்டர் உதவியுடன் கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.

சென்னை

பள்ளி மாணவர்கள்

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள் தன்னுடைய நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு அருகே கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவர்கள் 3 பேரும் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

2 பேர் மீட்பு

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதை அங்கிருந்த பொதுமக்கள் கண்டு, உடனடியாக மீட்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மீட்பு படையினரின் உதவியுடன் கடலில் மூழ்கிய 3 மாணவர்களில் யோகேஸ்வரன் மற்றும் தர்ஷன் ஆகிய 2 பேர் மீட்கப்பட்டனர். யோகேஸ்வரன் அதிக அளவு தண்ணீர் குடித்ததால் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். அருள் மட்டும் ராட்சத அலையில் சிக்கி உள்ளே அடித்து செல்லப்பட்டார். கடலோர காவல்படை வீரர்கள் படகுகள் மூலம் அவரை தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

ஹெலிகாப்டர் உதவியுடன்...

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் ராட்சத அலையில் சிக்கி மாயமான அருளை தேடி வருகின்றனர். மெரினா தீயணைப்பு படை வீரர்களும் முகத்துவாரம் முதல் அண்ணாசதுக்கம் வரையில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 மாணவர்களும் தங்களது பெற்றோரிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வந்ததாகவும், கடலில் குளிக்கும்போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


Next Story