தாயுடன் நடந்து சென்ற பள்ளி மாணவியை கொம்பால் முட்டி தூக்கிய மாடு- வீடியோ வைரல்


தாயுடன் நடந்து சென்ற பள்ளி மாணவியை கொம்பால் முட்டி தூக்கிய மாடு-  வீடியோ வைரல்
x

சென்னை அரும்பாக்கத்தில் தாயுடன் நடந்து சென்ற மாணவியை மாடு கொம்பால் தூக்கிய வீசிய பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

அரும்பாக்கம்,

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அர்சின் பானு. இவருடைய மூத்த மகள் ஆயிஷா (வயது 9). இவர், எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து அர்சின் பானு தனது மகள்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்றார். அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, இளங்கோ தெரு வழியாக 3 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களுக்கு முன்னால் கன்று குட்டியுடன் சென்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென திரும்பி தாயுடன் நடந்து சென்ற மாணவி ஆயிஷாவை தனது கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த மாணவியை அந்த மாடு விடாமல் காலால் மிதித்தபடி முட்டியது.

தனது கண் எதிரேயே மகளை மாடு முட்டித்தூக்கி வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்சின் பானு, மகளை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாட்டிடம் சிக்கிய மாணவியை மீட்க முயன்றனர்.

அவர்கள் கல்லால் அடித்தும் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சிறுமியை தனது முகத்தால் அழுத்தி எழுந்திருக்க விடாமல் அந்த மாடு மீண்டும் மீண்டும் குத்த முயன்றது. மேலும் தன் மீது கல் வீசியவர்களை முட்டுவதுபோல் வந்து அங்கிருந்து விரட்டியதுடன், மாணவியை அங்கிருந்த இழுத்து காப்பாற்ற முயன்றவரையும் முட்டுவதுபோல் விரட்டியடித்து விட்டு மீண்டும் மாணவியை தரையோடு தரையாக முகத்தால் அழுத்தியது.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த மாட்டை கல்வீசி தாக்கி அங்கிருந்து விரட்டி அடித்தனர். பின்னர் மாடு முட்டியதில் எழுந்திருக்க கூட முடியாமல் பரிதாபமாக சுருண்டு விழுந்து கிடந்த மாணவியை மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். மாடு தாக்கியதில் மாணவியின் முகம் மற்றும் கை, கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி ஆயிஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சாலையில் அஜாக்கிரதையாக மாடுகளை அழைத்து சென்ற மாட்டின் உரிமையாளரான அரும்பாக்கத்தை சேர்ந்த விவேக் (26) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவியை தாக்கிய மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் வாகனம் மூலம் புதுப்பேட்டை கால்நடை தொழுவத்திற்கு கொண்டு சென்றனர்.

தாயுடன் நடந்து சென்ற மாணவியை மாடு தனது கொம்பால் முட்டி தூக்கி வீசி பந்தாடிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள் பால் கறக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மாடுகளை சாலைகளில் விட்டுவிடுகிறார்கள். இது பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கிறது. தெருக்களில் மாடுகளை சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு மாடுகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். கடந்த 6 மாதத்தில் 2 ஆயிரத்து 809 மாடுகளை பிடித்துள்ளோம். மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் இனிமேல் மாடுகளை சாலையில் சுற்றவிடக்கூடாது. மாடு தாக்கிய சிறுமிக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு அவர் நல்ல முறையில் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story