வக்கீலுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது


வக்கீலுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
x

வள்ளியூரில் வக்கீலுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜஜெகன் (வயது 46). வக்கீல். இவர் நேற்று காலை வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து கதவை திறந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை அரிவாளால் வெட்டினர். இதில் ஜோசப் ராஜஜெகனின் தலை மற்றும் தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அப்போது அரிவாளால் வெட்டியவர்களில் ஒருவரை ஜோசப் ராஜஜெகன் பிடித்துக் கொண்டார். மற்ற 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். அவர்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ெறாருவர் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஜோசப் ராஜஜெகனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, பிடிபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அவர்கள் நெல்லை அருகே உள்ள மூன்றடைப்பு பேரின்பபுரத்தை சேர்ந்த கார்த்திக் (22), பிரவின் ராஜா (22) ஆகியோர் என்பதும், தப்பி சென்றவர் ஆனந்தராஜ் (40) என்பதும் தெரியவந்தது.

-இதையடுத்து கார்த்திக், பிரவின்ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனந்தராஜை தேடி வருகின்றனர். மேலும் என்ன காரணத்துக்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


1 More update

Next Story