திருமயம் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்
திருமயம் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த 2 பேர் ஒரு காரில் திருச்சி-காரைக்குடி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்துள்ள லெனா விலக்கு சுங்கச்சாவடி பகுதியில் சென்ற போது எதிரே சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல கார் முயன்றது. அப்போது எதிரே ஒரு மினி லாரி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மேலும், காரின் மீது மோதாமல் இருக்க மினி லாரி டிரைவர் திருப்பிய போது எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி மோதியது.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதேபோல் அரசு பஸ்சின் பின்பகுதி, மினி லாரியின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 2 பேரும், பஸ் பயணிகள், லாரி டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.