தோட்டத்தில் புகுந்து ஒற்றையானை அட்டகாசம்


தோட்டத்தில் புகுந்து ஒற்றையானை அட்டகாசம்
x
தினத்தந்தி 3 Sep 2023 9:30 PM GMT (Updated: 3 Sep 2023 9:31 PM GMT)

ஆயக்குடி அருகே மலையடிவார தோட்டங்களில் ஒற்றையானை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

காட்டுயானைகள் அட்டகாசம்

ஆயக்குடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவார தோட்டங்களில் தென்னை, கொய்யா விவசாயம் அதிகமாக நடக்கிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு, பயறு வகைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். வனப்பகுதியில் உள்ள காட்டுயானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி மலையடிவார தோட்ட பகுதிக்கு வருவது வாடிக்கை. அவ்வாறு வரும்போது பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது.

அந்தவகையில் ஆயக்குடியை அடுத்த சட்டப்பாறை, கோம்பைபட்டி பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. தனியாகவும், குட்டிகளுடனும் சுற்றி திரியும் யானைகள் இரவில் தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திவிட்டு பகலில் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. யானை அட்டகாசத்தால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்திந்து வருகின்றனர்.

கரும்பு சேதம்

நேற்று முன்தினம் கோம்பைபட்டியை சேர்ந்த தர்மதுரை என்ற விவசாயியின் தோட்டத்தில் ஒற்றையானை புகுந்து, அங்கு பயிரிட்டு இருந்த கரும்பு, மக்காச்சோள பயிர்களை தின்றும், ஒடித்து நாசப்படுத்தியதோடு சோலார் வேலியை முற்றிலும் சேதப்படுத்தியது. காலையில் தோட்டத்துக்கு வந்த தர்மதுரை, கரும்பு பயிர்கள், சோலார் வேலி சேதமாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து வருவாய் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயி தர்மதுரை கூறும்போது, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆயக்குடி மலையடிவார தோட்டங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. ஆனால் தற்போது வரை யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story