தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
x

அட்டகாசம்

ஈரோடு

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை தென்னை மரங்கள், மஞ்சள் பயிரை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது.

மஞ்சள் பயிர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இங்குள்ள வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இது தொடர் கதையாகி வருகிறது.

தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (வயது 45). விவசாயி. இவரது தோட்டம் ஊரையொட்டி உள்ளது. இங்கு அவர் 3 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் பயிர், தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளார்.

சேதப்படுத்திய யானை

இந்த நிலையில் பசுவண்ணா நேற்று காலை தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலி சாய்க்கப்பட்டு கீழே கிடந்தது. மேலும் தோட்டத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த மஞ்சள் பயிரும், தென்னை மரங்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தாளவாடி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை வெளியேறியுள்ளது. பின்னர் அருகே உள்ள பசுவண்ணாவின் தோட்ட பகுதிக்கு சென்றுள்ளது. அதன்பின்னர் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியை யானை தனது காலால் மிதித்து கீழே சாய்த்துள்ளது. அதைத்தொடர்ந்து அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த மஞ்சள் பயிரை மிதித்து நாசப்படுத்தியுள்ளது.

தென்னை மரங்களும்...

இதைத்தொடர்ந்து அருகே சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை மரங்களில் இருந்த தென்னங்குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்திவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது தெரியவந்தது. யானையால் சுமார் 30 தென்னை மரங்கள், ½ ஏக்கர் பரப்பளவிலான மஞ்சள் பயிர் சேதமானது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறும்போது, 'யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story