வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
ஒரத்தநாடு
பயிற்சிக்கான உதவித்தொகையை உயர்த்தி தரக்கோரி ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதவித்தொகை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் பயிற்சி மற்றும் பிற கல்லூரிகளுக்கு பயிற்சிக்கு செல்லும்போதும் மாணவர் ஒருவருக்கு அரசு மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 உதவித்தொகை வழங்கி வருகிறது.
உள்ளிருப்பு போராட்டம்
இந்த உதவித்தொகையை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவது போன்று ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் நர்மதா மற்றும் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் கோரிக்கை குறித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் மாலையில் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.