சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்


சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்
x

கறம்பக்குடியில் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்கக்கோரி சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை

ஆர்ப்பாட்டம்

கறம்பக்குடியில் அரசு மருத்துவமனைக்கு போதுமான டாக்டர்களை நியமித்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி கறம்பக்குடியில் சீனிக்கடை முக்கத்தில் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தாலிக்கு தங்கமும், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை வழங்கி மக்களின் மனதறிந்து அள்ளிக்கொடுத்தது அ.தி.மு.க. அரசு.

22 நாட்களாக போராட்டம்

எங்கள் ஆட்சியை பொறுத்தவரை ஓட்டுப்போடாதவர்கள் எங்களுக்கு ஏன்? ஓட்டுப்போடாமல் போனோம் என வருத்தப்படுகிற அளவிற்கு ஆட்சியை நடத்துவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் இன்று ஓட்டுப்போட்டவர்கள் ஏன் வாக்களித்தோம் என்கிற அளவிற்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கறம்பக்குடியில் கடந்த 22 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள்.

ஆனால் ஆளுகின்ற கட்சியை சேர்ந்தவர்கள், 2 அமைச்சர்கள், அதிகாரிகள் யாரேனும் வந்து பார்த்தார்களா? என்றால் இல்லை. மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்காக போராட்டம் நடந்த போது நான் அமைச்சராக இருந்த நேரத்தில் போராட்ட களத்திற்கு சென்று பேசினோம் முதல்-அமைச்சரிடம் நேரில் அழைத்து சென்று பேச வைத்தோம். விவசாயிகளை பாதிக்கிற எந்த திட்டங்களையும் அனுமதிக்கமாட்டோம் என உத்தரவாதத்தை எடப்பாடி பழனிசாமி அரசு பெற்றுக்கொடுத்தது.

மருத்துவமனை தரம் உயர்வு

இந்தியாவிலேயே சீர்கேடான சுகாதாரத்துறையை நிர்வகிப்பதிலும், அதிக கடன்களை வாங்கியதிலும் தமிழகம் நம்பர் ஒன். கறம்பக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்ததை தாலுகா மருத்துவமனையாக மாற்றியது ஜெயலலிதா அரசு. ரூ.2 கோடிக்கு கட்டிடங்கள், உபகரணங்களை கொடுத்து தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி திறந்து விட்டோம்.

நீங்கள் குறைந்தபட்சம் 6 டாக்டர்கள் ஒதுக்கீடு செய்யலாம். ஏன் செய்யவில்லை. இந்த போராட்ட மீட்பு குழு சார்பில் கட்சி பேதம் இல்லாமல் சென்னைக்கு வருகிற திங்கட்கிழமை வாருங்கள். நான் தலைமை செயலாளரிடமும், அரசு செயலாளரிடமும் உங்களை அழைத்து செல்கிறேன். நான் இந்த பிரச்சினையை முடித்து கொடுக்கிறேன். மக்களின் கோரிக்கைக்காக சட்டமன்றத்தில் அ.தி.மு.க. குரல் கொடுக்கும்.

கவன ஈர்ப்பு தீர்மானம்

கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் நியமிக்கக் கோரி வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி ஆகிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திக்தொண்டைமான், ஆறுமுகம், ராஜநாயகம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா உள்பட ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கொளுத்தும் வெயிலிலும் பொதுமக்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story