தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்


தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 July 2023 12:30 AM IST (Updated: 8 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோயம்புத்தூர்
கோவை


டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை குறித்து தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்


கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


டி.ஐ.ஜி. விஜயகுமார் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் நெருங்கிய அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். தற்போது வேறு மாநிலங்களில் நடப்பது போல் தமிழகத்திற்குள்ளும் நடக்க தொடங்கி உள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவில் அதிகாரிகள் தற்கொலைகளை பார்த்திருப்போம். தற்போது தமிழகத்தில் முதல் முறையாக இந்த சம்பவத்தை பார்க்கிறோம்.


காவல்துறையில் ஏட்டு, தலைமை காவலர், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் நிலையில் இருப்பவர்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தம் என்பது எந்த ஒரு துறையிலும் இல்லாத ஒரு உச்சகட்ட மன அழுத்தமாக உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்களின் அழுத்தம் என்பது வேறுமாதிரி யாக இருக்கும்.


காலிப்பணியிடங்கள்


காவல்துறையை முதலில் சீரமைக்க வேண்டும். காவல்துறையின ரின் மன அழுத்தத்தை முதலில் குறைக்க வேண்டும். தமிழகத்தில் காவல்துறையில் தற்போது 10 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. அதை நிரப்பி விட்டாலே தற்போது போலீசாருக்கான பணி அழுத்தம் குறையும்.


எனவே, முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காகவே முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை தமிழக அரசு வெளியிட வேண்டும்.


தனிக்குழு அமைத்து விசாரணை


போலீசாருக்கு பணி செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். கட்டாயமாக வார விடுமுறை அளிக்க வேண்டும். கர்நாடகாவில் நான் பணிபுரியும் போது அதை கட்டாயமாக பின்பற்றுவோம்.


நான் காவல்துறையில் பணியில் இருந்த போது 9 ஆண்டுகளில் 20 நாட்களுக்கும் குறைவாகத்தான் லீவு எடுத்து உள்ளேன். தமிழக காவல்துறைக்கு நற்பெயர் வருவதற்கு ரூ.10 ஆயிரம் கோடியை செலவு செய்தாலும் பரவாயில்லை. டி.ஐ.ஜி. விஜயகுமார் மரணம் குறித்து தனிக்குழு அமைத்து ஐகோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.


வேலை கொடுக்க வேண்டும்


டி.ஐ.ஜி.விஜயகுமாருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நடந்த உரையாடல் என்ன?. எந்தெந்த அதிகாரிகளுடன் பேசியிருந்தார். எது போன்ற வழக்குகளை அவர் விசாரித்து வந்தார்?. அவருக்கு மன அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.


உயர் அதிகாரிகள் பேசும் போது குடும்பத்தினரின் தனி உரிமை பாதிக்காதவாறு பேச வேண்டும். இறந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் குடும்பத்தின் வாரிசுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். கோவையின் முன்னாள் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது.


காரணம் என்ன?


இந்தநிலையில் டி.ஐ.ஜி. விஜயகுமாரின் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. எதையும் தொடர்படுத்தி நாங்கள் பேசவில்லை. டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய வேண்டும்.


ஏனென்றால், தற்கொலை செய்யும் மன அளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்க மாட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி இதில் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story