கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை


கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும்  சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை
x

கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கோர்ட்டு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை


வாகனங்கள் பறிமுதல்

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிம வளங்களை திருடி சென்ற ஆயிரக்கணக்கான வாகனங்களை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வாகனங்கள் அனைத்தும் மாவட்ட சிறப்பு கோர்ட்டுகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி வாகனங்களின் உரிமையாளர்கள் சுமார் 100 பேர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக போலீஸ் டி.ஜி.பி. தரப்பில் சீலிடப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அத்துடன், மணல் உள்ளிட்ட கனிமவள கடத்தலால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. கனிமவள சட்டப்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

செயல்படுத்தவில்லை

இதைதொடர்ந்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சட்டத்தை அமல்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தன போக்கால், சட்ட விரோத கனிமவள கடத்தல் அதிகரித்து வருகிறது. இதற்காக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டிய அதிகாரிகள் கடமை தவறுகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம் வரை தமிழகம் முழுவதும் சட்ட விரோத கனிமவள கடத்தல் சட்டத்தின் கீழ் 59 ஆயிரத்து 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்டதாக 63 ஆயிரத்து 542 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2218 வாகனங்கள் தான் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது வேதனையாக உள்ளது. அதாவது அதிகாரிகள் சட்டத்தை செயல்படுத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது.

நிவாரணம்

கனிமவள சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்றங்களில் தனிநபர் புகாரளிக்க விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஒரே நபர்கள் தான் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, கனிமவள சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டு சுற்றுச்சூழல் சட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் பொறுப்பு ஐகோர்ட்டுகளின் கடமை என்று சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இந்த வழக்கில் மனுதாரர்கள் கீழ் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.


Next Story