அரசு பள்ளிகளை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளை மேம்படுத்த சிறப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. 78 சதவீத தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 100-க்கும் குறைவானோர் தான் படிக்கின்றனர் என்பதிலிருந்தே அரசு பள்ளிகள் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன என்பதை உணர முடியும்.
பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும் தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்ததற்கு காரணமாகும். தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை கையாள்வதற்கு தலா ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார்.
இதை உணர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டமைப்பு, போதிய அளவில் ஆசிரியர்கள் நியமனம், மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளித்தல் என இதற்கான சிறப்புத் திட்டத்தை வகுத்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்குவதன் மூலம் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளை நோக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களும் படையெடுக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.