தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதியை சுற்றி வளைத்த தனிப்படை போலீஸ்
மதுக்கூரில் தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி விழுப்புரத்தில் சிக்கினார். தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 33). இவர் மீது கொலை, ஆதாய கொலை மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆதாய கொலை வழக்கில், இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சத்யராஜ் , திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி 2 நாட்கள் போலீஸ் காவலுடன் கூடிய பரோலில் மதுக்கூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். ஆனால் போலீசாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவானார். இது குறித்து மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து சத்யராஜை பிடிக்க பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸ்காரர்கள் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த 20 நாட்களாக சத்தியராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் விழுப்புரத்தில் சத்தியராஜ் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தனிப்படை போலீசார் விழுப்புரத்துக்கு விரைந்து சென்று சத்தியராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை மதுக்கூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.