அஷ்டலிங்க கோவில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்குவதற்கு சிறப்பு பூஜை
கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்குவதற்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மலை சுற்றும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்க கோவில்களும், சூரியன் மற்றும் சந்திர லிங்கம் கோவில்களும் உள்ளன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் அந்த கோவில்களில் வழிபாடு செய்வார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அதனைத்தொடர்ந்து அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் சூரியன், சந்திரன் லிங்க கோவில்களும் என 10 கோவில்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற உள்ளது.
திருப்பணிகள் மேற்கொள்ளவதற்கான தொடக்க நிகழ்ச்சியாக திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள இந்திர லிங்கம் கோவிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
அப்போது அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசம் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்தனர்.
பின்னர் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதனை சிவாச்சாரியார்கள் சாமி சன்னதியை சுற்றி வந்தனர். பின்னர் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.