எல்லநல்லி-கேத்தி செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்-வாகன ஓட்டிகள் கோரிக்கை
எல்லநல்லி-கேத்தி பாலாடா செல்லும் சாலையில், விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊட்டி
எல்லநல்லி-கேத்தி பாலாடா செல்லும் சாலையில், விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விபத்து
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எல்லநல்லி- கேத்தி பாலாடா செல்லும் சாலையில் பைபிள் கல்லூரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. குறிப்பாக அரசு பஸ், தனியார் பஸ் மற்றும் காய்கறி வாகனங்கள் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். அந்த சாலையில் இரண்டு கனரக வாகனங்கள் வந்தால் சில நேரங்களில் வழிவிட முடியாது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும்.
இந்த சாலையில் கடந்த வாரம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதி, சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
வேகத்தடை
எல்லநல்லியில் இருந்து கேத்தி பாலாடா செல்லும் சாலை பல இடங்களில் மிகவும் குறுகலான அமைப்பை கொண்டு உள்ளது. இதனால் அவ்வப்போது சிறிய விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் நடந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும் இந்த சாலை வழியாக பல்வேறு வன விலங்குகள் காலை, மாலை, இரவு நேரங்களில் சாலையை கடந்து செல்லும். எனவே இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வது, மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் மிகவும் ஆபத்தானதாகும்.
உடனடியாக இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். குறுகலான மற்றும் விபத்து அபாயம் நிறைந்த சாலை என்பது குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்பலிகள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.