காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்


காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
x

தமிழக அரசு ஏற்பாடு செய்த காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்

நாமக்கல்

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள்.

வசதிபடைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள்.

வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்லமுடிவது இல்லை.

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் செல்கிறார்கள்.

அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கிவைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக்கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பை குறைக்கலாம்

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நாமக்கல்லை சேர்ந்த ஏகாம்பரம்:-

கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இருப்பது போன்ற ஆன்மிக பயணத்தை தமிழக அரசு அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தில் 60 முதல் 70 வயது நிரம்பிய பக்தர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவித்து உள்ளார்கள்.

பொதுவாக இந்த வயதில் உடல்நலம் குன்றிய நிலையில் இருப்பார்கள். எனவே வயது வரம்பை 50 ஆக குறைத்தால் பலரும் பயன் அடைவார்கள். அதே சமயம் ஆன்மிக பயணம் செல்லும் நபர்கள் 10 நாட்கள் தங்கி இருக்க வேண்டிய இருப்பதால், போதிய உடல் தகுதி உள்ளதற்கான அரசு மருத்துவர்களின் சான்று இணைக்கப்பட வேண்டும் என்பதில் தவறு இல்லை.

பரமத்திவேலூரை சேர்ந்த செல்வராஜ்:-

தமிழக அரசு முன்னெடுத்துள்ள காசி ஆன்மிக பயண திட்டம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. தற்போது இந்த பயண திட்டத்திற்கு வயது வரம்பு 60 முதல் 70 வயதாக உள்ளது. வயது வரம்பில் தளர்வு கொடுத்து 50 வயது நிரம்பிய அனைவரும் போகலாம் என அறிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் இதற்காக வருமானச்சான்று, வயது சான்று, மருத்துவச் சான்று, வீட்டின் ஆதாரம் நகல் உள்ளிட்டவற்றை கேட்கும் நடைமுறைகளை தளர்த்த வேண்டும்.

எண்ணிக்கையை அதிகரிக்கலாம்

ராசிபுரத்தை சேர்ந்த மாணிக்கம்:-

காசி யாத்திரை என்பது ராமேஸ்வரத்தில் தொடங்குவதே ஐதீகம். அதை அரசு சிறப்பாக செய்துள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 200 பேர் என்ற எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும். அதாவது தற்போது மண்டலத்திற்கு 10 பேர் என்று இருப்பதை 20 பேர் என அதிகரித்தால் கூடுதலான நபர்கள் பயன் அடைவார்கள்.

வசதி படைத்தவர்கள் எப்போது நினைத்தாலும் காசி சென்று வருவார்கள். ஆனால் ஏழை பக்தர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இறைவன் அருளை பெற அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சி மிகவும் நல்ல முயற்சி.

மோகனூர் அருகே உள்ள வாழவந்தியை சேர்ந்த ராமசாமி :-

பொருளாதார பிரச்சினை, மொழிப்பிரச்சினையால் வயதான காலத்தில் காசிக்கு தனியாக செல்ல முடியாது. இந்த நிலையில் தமிழக அரசு காசிக்கு புனித பயணத்தை ஏற்படுத்தி தந்திருப்பது அனைவருக்கும் கிடைத்த ஒரு வரபிரசாதமாகும். ஆனால் விண்ணப்பதாரர்கள் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாசில்தாரிடம் இருந்து வருமானச்சான்று பெற்று இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை நீக்க வேண்டும்.

இந்த யாத்திரை திட்டத்தை அதிகாரிகள் வெளிப்படை தன்மையுடன், புகார்கள் இன்றி, திறம்பட நடத்தி ஆன்மிகவாதிகள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயரை வாங்கி தரவேண்டும். காசிக்கு சென்றாலும் தங்குவதற்கு இடம் மற்றும் உணவு போன்றவற்றை தமிழக கலாசாரப்படி வழங்க வேண்டும்.

நல்ல அறிவிப்பு

வெண்ணந்தூர் வெள்ளைபிள்ளையார் கோவிலை சேர்ந்த விஜயலட்சுமி:-

சிறுபான்மை மக்களுக்கு மட்டும் புனித பயணத்துக்காக நிதியை அரசு வழங்கி வந்த நிலையில், இப்போது இந்துக்களுக்கான ஆன்மிக யாத்திரையை முன்னெடுத்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது. காசி மட்டுமல்ல கேதார்நாத், பூரி போன்ற ஆன்மிக தலங்களையும் இணைக்கும் வகையில் யாத்திரை பயணங்களை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை நல்லதொரு அறிவிப்பாக பார்க்கிறோம். நல்ல திட்டங்களுக்கு மக்களின் ஆதரவு என்றுமே இருக்கும். மண்டலம் தோறும் 200 பேரை அழைத்துச் செல்லும் வகையில் இத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

மிகவும் மகிழ்ச்சி

திருச்செங்கோட்டை சேர்ந்த தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு:-

ஒவ்வொரு தர்மத்திற்கும் வாழ்நாள் கடமையாக ஒரு சில புனித யாத்திரைகளை பெரியவர்கள் வகுத்து உள்ளனர். அந்த வகையில் இந்துவாக பிறந்த ஒருவர் தனது வாழ்நாளில் ஒரு முறையேனும் கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசிப்பது மிகவும் விசேஷமாக புனித நூல்களில் விவரிக்கப்பட்டு உள்ளது. தங்களது ஆயுட்காலத்தில் ஒரு முறையேனும் காசிக்கு செல்ல மாட்டோமா? என்று பல பேர் ஏங்கி தவித்து வருகின்ற இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் காசிக்கு புனித யாத்திரையாக அழைத்துச் செல்ல இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தத் திட்டத்தை உண்மையில் மனம் குளிர வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது காசிக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து செல்பவர்கள் மிக அதிகம் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் இருப்பவர்கள் காசிக்கு செல்வதும், வட இந்தியாவில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் யாத்திரைக்கு வருவதும் காலம் காலமாக பாரத தேசத்தின் தேச ஒருமைப்பாட்டுக்கு மிகவும் துணை நிற்கிறது. தமிழ்நாடு அளவில் மொத்தம் 200 பேர் அழைத்துச் செல்வதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதை மாவட்டம் தோறும் 100 பேர் என்ற அளவில் அழைத்துச் செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story