கோவையில் முஸ்லிம் பெண்கள் திடீர் போராட்டம்


கோவையில் முஸ்லிம் பெண்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் முஸ்லிம் பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் முஸ்லிம் பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசு தடை

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கோவையில் உள்ள பா.ஜனதா அலுவலகம் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவையில் மத்திய அரசின் அதிவிரைவு படை மற்றும் தமிழக அரசின் சிறப்பு படையினர் உள்பட 3,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

போலீசார் குவிப்பு

இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க கோவையில் உள்ள உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால், போத்தனூர், குனியமுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் போடப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். சில பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அந்த அமைப்பின் மாவட்ட அலுவலகம் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

முஸ்லிம் பெண்கள் போராட்டம்

இதற்கிடையே மத்திய அரசின் தடை உத்தரவை கண்டித்து உக்கடம் பஸ் நிலையம் அருகே முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலை 9 மணியளவில் திரண்டனர். பின்னர் அவர்கள் கோட்டைமேடு பகுதி வழியாக ஊர்வலமாக சென்றதுடன், அங்குள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு திரண்டு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீஸ் வடக்கு பகுதி துணை கமிஷனர் மாதவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன சோதனை

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பதற்றமான பகுதிகளில் 6 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முக்கிய இடங்களில் கூடாரம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அத்துடன் மாநகர பகுதியில் 27 சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட பின்னரே மாநகர பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story