தென்னை நார் தொழிற்சாலைகளை கணக்கெடுக்கும் பணி


தென்னை நார் தொழிற்சாலைகளை கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நலிவடைந்து வரும் தொழிலை மேம்படுத்த தென்னை நார் தொழிற்சாலைகளை கணக்கெடுக்கும் பணியை கயிறு வணிக மேம்பாட்டு கழகம் தொடங்கியுள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

நலிவடைந்து வரும் தொழிலை மேம்படுத்த தென்னை நார் தொழிற்சாலைகளை கணக்கெடுக்கும் பணியை கயிறு வணிக மேம்பாட்டு கழகம் தொடங்கியுள்ளது.

தொழிற்சாலைகள் கணக்கெடுப்பு

பொள்ளாச்சி பகுதியில் நார் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகிறது. இந்த தொழில் உலக பொருளாதார மந்தம், விலை வீழ்ச்சி, மின் கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் நலிவடைந்து வருகிறது. இதனால் தொழிற்சாலைகளை நடத்த முடியாமல், விலை நிலங்களாக மாறி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு கழகம் (டேன் காயர்) தொடங்கப்பட்டு, கோவையில் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தென்னை நார் தொழிலை மேம்படுத்த தொழிற்சாலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வாட்ஸ்-அப் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.

மதிப்பு கூட்டு பொருட்கள்

இதுகுறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை தென்னை நார் தொழிற்சாலைகள் நேரடியாக பயன்படுத்தி கொள்ளும் வகையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு கழகம் தொடங்கப்பட்டு உள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த சிறு, குறு தொழிற்சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதில் டேன் காயர் மூலமாக நலிவடைந்த தென்னை நார் தொழிற்சாலைகளுக்கும் உதவிகள் வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.தமிழகத்தில் உள்ள தென்னை நார் உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி எடுப்பதற்கும், அங்கு எந்த வகையான பொருட்கள் தேவை என்பதை அறிந்து, மூலப்பொருட்களை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருகிறது.

உரிய தீர்வு

மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க உள்நாடுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க மாநில அரசால் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழு மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு பயிற்சி, கட்டமைப்பு, பொருளாதார உதவிகளை டேன் காயர் மூலமாக கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அடுத்த 4 மாதங்களில் தென்னை நார் தொழிற்சாலைகள் சந்திக்கும் சில பிரச்சினைகளுக்கு மாநில அரசால் உரிய தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story