தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி ஆசிரியை பலி
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி ஆசிரியை பலியானார்.
தியாகதுருகம்,
தனியார் பள்ளி ஆசிரியை
கடலூர் சி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் ராஜ்குமார் (வயது 28). இவரது மனைவி ஐஸ்வர்யா (21). கணவன்-மனைவி இருவரும் கள்ளக்குறிச்சியில் தங்கி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் பள்ளி விடுமுறையின் காரணமாக தனது சொந்த ஊரான கடலூர் சி.என். பாளையத்திற்கு சென்றனர். பின்னர், மீண்டும் கடந்த 3-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு மோட்டர் சைக்கிளில் புறப்பட்டனர்.
மோட்டார் சைக்கிளை ராஜ்குமார் ஓட்டினார். தியாகதுருகம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா அணிந்திருந்த துப்பட்டா மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியது.
பலி
இதனால் ஐஸ்வர்யா நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக ஐஸ்வர்யா இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.