காதலனுடன் சென்ற இளம்பெண் பிணமாக மீட்பு - கொலை செய்யப்பட்டாரா?


காதலனுடன் சென்ற இளம்பெண் பிணமாக மீட்பு - கொலை செய்யப்பட்டாரா?
x

காதலனுடன் சென்ற இளம்பெண், உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது 36). தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா (30). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அமுதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த பாபு, மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமுதா, தனது கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். பாபு தனது மனைவியை பல இடங்களில் தேடி வந்தார்.

இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி, திருவள்ளூர் பெரியகுப்பம் கம்பர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களாக அந்த வீடு பூட்டியே கிடந்தது.

இந்தநிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

பூட்டிய வீட்டுக்குள் அமுதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. அவரது கள்ளக்காதலன் மாயமாகி இருந்தார். அமுதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலையுண்ட அமுதா, ஏற்கனவே 2 முறை தனது கணவர், பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் சென்றுவிட்டார். அவர் இருக்கும் இடம் ெதரிந்து, பாபு சமாதானம் பேசி அழைத்து வந்தார். அதன்பிறகு 3-வது முறையாக கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். அவர் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்ட பாபு, மனைவி அமுதாவை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்ததுடன், தற்போது வீட்டுக்கு திரும்பிவர விரும்பவில்லை என்றும் மறுத்துவிட்டார். இதனால் தனது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக பாபு அளித்த புகாரின்பேரில் அமுதாவின் கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த சிவப்பிரகாசம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் சிக்கினால்தான் அமுதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story