குடிபோதையில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
பெருங்களத்தூரில் குடிபோதையில் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெருங்களத்தூர்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 23). இவர் கூலிவேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக டேனியல் கோபித்து கொண்டு பழைய பெருங்களத்தூரில் வசித்து வரும் தனது நண்பர் மணிகண்டன் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் இரவு 11 மணி அளவில் டேனியலும், மணிகண்டனும் வீட்டின் மாடியில் இருந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன், டேனியலிடம் நீ வீட்டுக்கு செல்வது தான் நல்லது என அறிவுரை கூறினார். ஆனால் அதை காதில் வாங்காமல் நான் வீட்டுக்கு செல்ல மாட்டேன் செத்தாலும் சாவேன் என கூறினார்.
மின்கம்பியில் குதித்தார்
டேனியலுக்கு போதை தலைக்கேறியதை அறிந்த மணிகண்டன் அவரை மாடியில் படுக்க வைப்பதற்காக வீட்டுக்குள் சென்று பாய், தலையணைகளை எடுக்க சென்றார். அந்த நேரத்தில் டேனியல் மாடியில் இருந்து திடீரென தெருவில் உள்ள மின்கம்பிகள் மீது குதித்தார்.
இதில் மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி அவர் துடிதுடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இதை கண்டு அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பீர்க்கன்காரணை போலீசார், தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், முடிச்சூர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மின்கம்பியில் துடிதுடித்து கொண்டு இருந்த டேனியலை மீட்டனர்.
சாவு
பின்னர் மருத்துவ குழுவினர் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் டேனியல் குதித்ததால் பழுதான மின்கம்பத்தை சீரமைத்து சுமார் 1 மணி நேரம் கழித்து அந்த பகுதிக்கு மின் இணைப்பை கொடுத்தனர். மாடியில் இருந்து மின்கம்பத்தின் மீது குதித்து வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.