மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து வாலிபர் பலியானார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டு யாதவர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 27). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னர் சொந்த ஊர் திரும்பி விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் இன்று காலை கறம்பக்குடியில் இருந்து புதுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கறம்பக்குடி பெரிய காட்டாற்று பாலம் அருகே சென்றபோது சாலையின் இடதுபுறம் இருந்த மண் ரோட்டில் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் காட்டாற்றின் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் விரைந்து வந்து பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.