அம்மாபேட்டை அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு- குலதெய்வ கோவிலுக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
அம்மாபேட்டை அருகே குலதெய்வ கோவிலுக்கு வந்த வாலிபர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே குலதெய்வ கோவிலுக்கு வந்த வாலிபர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவிலில் திருவிழா
ஈரோடு மாமரத்துபாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 47). இவருடைய மகன் கவுதம் (வயது 25). அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சியில் சேகரின் குலதெய்வமான பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொள்வதற்காக கவுதம் தன்னுடைய உறவினர் தீபக் என்பவருடன் சென்றிருந்தார். அப்போது கோவில் அருகே உள்ள பூனாச்சி ஏரியில் இருவரும் குளிக்க சென்றனர்.
மூழ்கினார்
அங்கு குளித்தபோது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் தண்ணீரில் மூழ்கியபடி தத்தளித்தனர். இதைப்பார்த்து கோவிலின் அருகே நின்றிருந்தவர்கள் ஓடிவந்து ஏரியில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அதற்குள் கவுதம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். தீபக்கை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஏரியில் இறங்கி தேடினர். சிறிது நேரத்தில் கவுதமின் உடலை மீட்டனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுதமின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி அழுதது காண்போைரயும் கண்கலங்க செய்தது.
குலதெய்வ கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.