கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு


கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு
x

கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் போர்வையாலும், முகத்தில் பாலிதீன் பையையும் கட்டியபடி பிணமாக கிடந்தார்.

சென்னை

சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மாலதி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

மாலதி கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் ராம்குமார் மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் ராம்குமார் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு படுக்கை அறையில் இருந்த கட்டிலில் ராம்குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் முழுவதும் கீழும், மேலுமாக 3 போர்வையால் சுற்றப்பட்டும், தலை மற்றும் முகம் முழுவதும் தலையணை உறையால் மூடப்பட்டு அதன் மீது பாலிதீன் பையால் சுற்றி கயிறு போட்டு கட்டி இருந்தது.

அவரது உடல் முழுவதும் கட்டிலிலும், கால்கள் இரண்டும் தரையில் ஊன்றியபடியும் கிடந்தார். உடல் முழுவதும் போர்வையால் சுற்றப்பட்டு இருந்தாலும் கைகள் வெளியே இருந்தது. இதுபற்றி ெகாடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன், கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ராம்குமார் உடல் முழுவதும் போர்வையாலும், முகத்தில் தலையணை உறைக்கு மேல் பாலிதீன் பையை போட்டு கட்டி மூச்சுத்திணற செய்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராம்குமாரின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story
  • chat