சிவகங்கையில் வீட்டில் தனியாக இருந்த தொழில் அதிபரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபர் கைது 6 ஆண்டுக்கு பின்பு சிக்கினார்
வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடையவரை 6 வருடத்திற்கு பின்பு போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடையவரை 6 வருடத்திற்கு பின்பு போலீசார் கைது செய்தனர்.
தொழிலதிபர்
சிவகங்கை ஆக்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர் ராஜா (வயது58). இவர் சிவகங்கையில் ஜவுளி கடை நடத்தி வந்தார். பின்னர் அதை மூடிவிட்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். ராஜா குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் ராஜா வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். கடந்த 6 வருடமாக இந்த வழக்கில் குற்றவாளியை பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
தனிப்படை
இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சிவகங்கை காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த நாகஜோதி என்ற நாகலட்சுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் (26) என்பவரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்தது தெரிந்தது. மேலும் நாகஜோதி தற்போது வெளிநாட்டுக்கு சென்று விட்டதும் தெரிந்தது.
கைது
இதைதொடர்ந்து தனிப்படை போலீசார் அஜித் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அஜித் குமாருக்கும் நாகஜோதிக்கும் இடையே ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரண்டு பேரும் ராஜாவின் வீட்டிற்கு பணம் கடன் கேட்பது போல் சென்று அவரை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி சென்றதும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து சிவகங்கை நகர் போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.
6 வருடம் கழித்து கொலை வழக்கில் தொடர்புடையவரை கைது செய்த நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பாராட்டினார்.