லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தேசிங்குராஜன்(வயது 27). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சென்றார். அப்போது இரும்பு உதிரிபாகங்கள் ஏற்றி வந்த கனரக லாரி ஒன்று முகப்பு விளக்குகளை சரிபார்ப்பதற்காக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரி மீது தேசிங்குராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த தேசிங்குராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து டிரைவர் லாரியை அங்கிருந்து ஓட்டிச்சென்றார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சிறிது தூரம் சென்ற லாரியை விரட்டிச்சென்று, மடக்கி பிடித்து நிறுத்தினர். மேலும் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தேசிங்குராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.