தாய் மாமனை உலக்கையால் அடித்துக்கொன்ற வாலிபர் கைது
ஆலங்குடி அருகே தாய் மாமனை உலக்கையால் அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் பூசாரி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே டீ.களபம் ஊராட்சியில் உள்ள ஆத்தியடிமனை கிராமத்தை சேர்ந்தவர் வீரைய்யா (வயது 65). இவர் வீட்டின் அருகே உள்ள தில்லைநாயகி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவரது மனைவி சாந்தாயி (60). இவர்களுக்கு நமச்சிவாயம் (35), ராமன் (28), லட்சுமணன் (27) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் வீரைய்யாவின் தங்கை மகனான கறம்பக்குடி அருகே உள்ள மோட்டுப்பட்டியை சேர்ந்த செல்வராசு மகன் கனகராஜ் (23) என்பவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு வீரைய்யா வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தனது தாய் மாமனிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு வீரைய்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.
உலக்கையால் அடித்துக்கொலை
இதையடுத்து, வீரைய்யா கோவில் அருகே உள்ள கொட்டகையில் இரவு 11 மணியளவில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ் உலக்கையால் வீரைய்யாவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த வீரைய்யா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனைதொடர்ந்து கனகராஜ் தனது அத்தை சாந்தாயியிடம் வீரைய்யா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக தெரிவித்து விட்டு கோவில் மரத்தின் மேல் ஏறி அமர்ந்தார். கணவர் இறந்ததால் அதிர்ச்சி அடைந்த சாந்தாயி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரைய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கனகராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்காத ஆத்திரத்தில் உலக்கையால் தனது தாய்மாமனை அடித்துக்கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.