கல்குவாரி குட்டையில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு
வாணாபுரம் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கிய வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு தண்ணீரில் மிதந்தது.
கூலித்தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மைக்கேல்புரம் கோணத்தன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் மகன் எட்வின்அந்தோணி (வயது 18). இவர் பள்ளி படிப்பை முடித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எட்வின்அந்தோணி நண்பர்களுடன் வாணாபுரம் அருகே தொண்டமானூரில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்த எட்வின் அந்தோணி திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் மற்றும் தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கல்குவாரி குட்டையில் தேடினர். மேலும் இரவு நேரம் என்பதால் அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
மீட்பு
குட்டை ஆழமான பகுதி என்பதால் கடந்த 3 நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் எட்வின் ்அந்தோணி உடல் தண்ணீரில் மிதந்தது. அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு வாணாபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடலை பார்த்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.