தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபர்


தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபர்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து பட்டப்பகலில் தனியார் கூரியர் நிறுவன லாரியை கடத்தி சென்ற வாலிபரை திண்டிவனம் அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்

விழுப்புரம்

திண்டிவனம்

கூரியர் நிறுவன லாரி

சென்னையில் இருந்து நேற்று காலை தனியார் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான லாரி ஒன்று புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ரெட்டியூர் அடுத்த ராமானூர் பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 32) என்பவர் லாரியை ஓட்டினார்.

பகல் 12 மணியளவில் சென்னை அச்சரப்பாக்கம் பகுதியில் வந்தபோது சரவணன் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு சாப்பாடு வாங்கி வருவதற்காக ஓட்டலுக்கு சென்றார். அப்போது யாரோ மர்ம நபர் அந்த லாரியை கடத்தி சென்றார்.

தடுப்பு கம்பியை உடைத்துவிட்டு

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சரணவன் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறி லாரியை துரத்தி வந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் சுங்கச்சாவடி அருகே லாரி வந்தபோது வாகனத்தில் இருந்து இறங்கிய சரவணன் ஓடிச்சென்று லாரியின் பக்கவாட்டு கதவை திறந்து ஏற முயன்றார்.

அப்போது சினிமாவை மிஞ்சும் வகையில் அந்த மர்மநபர், சுங்கச்சாவடி தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு அங்கிருந்து லாரியை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் உடனடியாக திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் மடக்கினர்

அதன்பேரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பின்னால் துரத்தி சென்று திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியில் லாரியை மடக்கினர். பின்னர் லாரியில் இருந்த மர்ம நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வடக்கு கள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சோமு என்கிற மாடசாமி(36) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை அச்சரப்பாக்கம் போலீசாரிடம் திண்டிவனம் போலீசார் ஒப்படைத்தனர். லாரியை கடத்தி சென்றதற்கான காரணம் குறித்து மாடசாமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த கடத்தல் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story