தொழிலாளியை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது


தொழிலாளியை கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2023 12:30 AM IST (Updated: 5 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்று உடலை தண்டவாளத்தில் வீசியவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

காரியாபட்டி

தண்டவாளத்தில் பிணம்

திருச்சுழி அருகே புலியூரான்- பி.தொட்டியங்குளம் இடையிலான ரெயில்வே மேம்பால தண்டவாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காயங்களுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த நபர் திருச்சுழி அருகேயுள்ள ஆலடிப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 50) என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து திருச்சுழி துணை சூப்பிரண்டு ஜெகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலை செய்த நபர்களை தேடி வந்தனர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் சின்ன கட்டங்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாண்டி முருகன் (25) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அன்பரசன் டீக்கடை மாஸ்டராக இருந்த போது பாண்டி முருகனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், சம்பவத்தன்று அன்பரசனும், பாண்டி முருகனும் சேர்ந்து சின்ன கட்டங்குடி பகுதியில் பாண்டி முருகனுக்கு சொந்தமான தோட்டத்தில் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மதுபோதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாண்டி முருகன் கட்டையால் அன்பரசனை தாக்கியதில் அன்பரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கைது

இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாண்டிமுருகனின் நண்பர்களான கட்டங்குடியை சேர்ந்த வீரபாண்டி (32), ராஜபாண்டி (27) மற்றும் பாண்டி முருகனின் சகோதரர்களான மாதவன் (23), அன்பழகன் (32) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து அன்பரசனின் உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி சென்று புலியூரான் பகுதியிலுள்ள ரெயில்வே மேம்பால தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டது போல வீசி சென்றுவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அன்பரசனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசி விட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடிய பாண்டி முருகன், வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகிய 5 பேரையும் திருச்சுழி போலீசார் கைது செய்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story