அண்ணாநகரில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார்


அண்ணாநகரில் மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார்
x

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.

சென்னை

சென்னை கீழ்ப்பாக்கம், டேங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவர், கொத்தவால்சாவடி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் விக்னேஷ்வரன் (27). என்ஜினீயரிங் படித்துள்ள இவர், தனது உறவினர் மகளான சாலினியை கல்லூரியில் விடுவதற்காக நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அண்ணாநகர், சிந்தாமணி அருகே சென்றபோது எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் விக்னேஷ்வரன் பரிதாபமாக இறந்தார். சாலினி மற்றும் எதிரே வந்து மோதிய மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த பவுன்குமார் (21) இருவரும் படுகாயம் அடைந்தனர். சாலினிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்தநிலையில் படுகாயங்களுடன் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பவுன்குமார், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி பவுன்குமாரின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் தானமாக எடுத்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு பவுன்குமாரின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்த பவுன்குமார், என்ஜினீயரிங் முடித்துவிட்டு பயிற்சி எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story