பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது


பற்களை பிடுங்கிய விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
x

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

அதிகாரி அமுதா விசாரணை

இதற்கிடையே, அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், போலீசாா் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே, பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. அவர் அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சுபாஷ் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில், 4 பிரிவுகளின் கீழ் பல்வீர்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார், சுபாஷிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர்.

சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதில், விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன் ரகு, பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட வழக்கு ஆவணங்களை நேற்று காலையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் உலகராணியிடம் ஒப்படைத்தார்.

10 பேர் குழு

அந்த ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு செய்து தங்களின் விசாரணையை தொடங்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி, தடயவியல் நிபுணர் ஆனந்தி மற்றும் கைரேகை நிபுணர்கள், புகைப்பட கலைஞர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழு நேற்று இரவு 7.30 மணியளவில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு வந்தது. அங்கு விசாரணையை தொடங்கினர்.

கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை

அங்குள்ள இன்ஸ்பெக்டர் அறை, கைதிகள் அறை, மாடியில் உள்ள அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர் கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவழைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். நீண்ட நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையால் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.


Next Story